×

ஆதிசிவத்துள் ஐக்கியமான சித்தர்காடு சித்தர்கள்

ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் குருபூஜை

ஒருமுறை சிற்றம்பல நாடிகள் தனது அறுபத்து மூன்று சீடர்களோடும் திருமடத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். என்ன உணவு வைக்கப்பட்டதோ  அது அன்றைய கணத்தில் குருவின் விருப்பம். அது நஞ்சே எனினும் அமுதமே ஆனாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். குருவருளை எந்த இடையூறுமின்றி  பெற்றுக்கொள்ள விருப்பமும், அகங்காரமும் பெருந்தடைகளாகும். குருவின் திருமுன்பு அடங்கி அமரவேண்டும். என்னவரினும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்  வேண்டும். அதற்கு மனம் அடங்க வேண்டும். ஆனால், பக்குவமல்லாதோரின் மனமானது எப்படியேனும் தன்னை பிழைக்க வைக்கவே முயலும். தன்னுடைய  அபக்குவத்தை எப்படியாவது வெளிக் காட்டிவிடும். அப்படித்தான் அங்கும் கண்ணப்பர் எனும் சீடர் பக்குவப்படாத தன்மையை வெளிப்படுத்தினார். அமர்ந்திருந்த சீடர்களின் இலையில் அன்னமும் நெய்யும் பருப்பும் பரிமாறப்பட்டது. உணவை எடுத்து உண்ணத் தொடங்கினர்.

இலையில் அன்னமும், பருப்பும்  இட்டுவிட்டு நெய்க்கு பதிலாக தவறுதலாக வேப்பெண்ணையை வைத்து விட்டு பரிசாரகர் நகர்ந்தார். இட்ட வேப்பெண்ணையை நெய்யோ எனக் கருதி நாக்கில்  தடவியவுடனே முகம் கோணினார், கண்ணப்பர். கசப்புச் சுவையை உணர்ந்தவர், ‘‘ஐயே...கசக்கிறது’’ என்றார். சிற்றம்பல நாடிகள் நிமிர்ந்தார். ‘‘கண்ணப்பர்  என்ன சொல்கிறார்?’’ என்று கேட்டார். ‘‘குருநாதா, கண்ணப்பர் கசக்கிறது என்கிறார்,’’ என்று பதில் வந்தது.‘‘ஓஹோ! கசப்பை உணர்ந்து இது  வேண்டாமென ஒதுக்கவும், வேறொரு ருசியை வேண்டும் எனச் சொல்பவன் அவனுள் இருக்கிறானோ? அவிச்சுவையறிவான் தவச்சுவையறியான். இன்னும் அது  பக்குவம் பெறவில்லையோ?’’ என்று குரு சொன்னவுடன் கண்ணப்பர் விதிர்விதிர்த்துப் போனார். குருவின் திருவடியில் விழுந்து அழுதார்.

மௌனமாக புறப்பட்டு வடக்கு நோக்கி நகர்ந்தார். ஒரு மரத்திற்குக் கீழ் அமர்ந்து தம்முள் ஆழ்ந்தார். சரியான நேரத்திற்கு குரு நம்மை ஆட்கொள்வார் எனும்  நம்பிக்கையூடே தவத்தீயை கொழுந்து விட்டெறியச் செய்தார். வானில் பிறைகள் வளர்ந்து தேய்ந்து பட்சங்களாகக் காலம் கடந்தது. சிற்றம்பல நாடிகள் ஒரு  நற்பிறையன்று சகல சீடர்களையும் அருகே அழைத்தார். ‘‘சீடர்களே வரும் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று அனைவரும் சமாதி கூடுவோம். தஞ்சை  அரசரிடம் அடியேனும் சீடர்களும் ஜீவ சமாதி அடையப் போகின்றோம், தாங்கள் காஞ்சிபுரம் சென்று அங்கு திருமடம் அமைத்து நம் மெய்கண்ட சந்தானத்தை  தழைக்கச் செய்யுங்கள் என்று தெரிவியுங்கள்’’ என்றார்.

அரசர் குருவான சீகாழி சிற்றம்பல நாடிகளின் அருளாணைக்கு அடிபணிந்து அனைத்துச் சீடர்களுக்கும்  சேர்த்து சமாதிக் குழி வெட்ட ஏற்பாடு செய்தார். அரசரோடு அடியார்களும் ஊர் மக்களும் திரண்டு நின்றனர். நடுவே ஒரு பெருங்குழியும் அதைச் சுற்றிலும்  அறுபத்து மூன்று சமாதிக் குழிகளையும் கண்டு பாரில் இதுபோல் ஒரு வைபவம் இனி எவரும் காண முடியாது என்று திகைத்து நின்றனர். சிவஞான போத சொரூபமான சீகாழி சிற்றம்பல நாடிகள் கருணையாக எல்லோரையும் பார்த்தார். பார்வை பெற்றோர் சிலிர்த்தனர். சிலர் கண்ணீர் சிந்தினர். பலர் சிரசின் மீது கையுயர்த்தி வணங்கினர். கூட்டம் சிவோஹம்... சிவோஹம்... என்று பிளிறியது. மெல்ல நடந்து மையத்தே தனக்கென அமைக்கப்பட்ட சமாதிக் குழியினுள் அமர்ந்து திருக்கண்களை குவித்து மூடினார் குரு. சிவம் சிவத்தோடு ஏகமாகியது. சீடர்களும் அவ்வாறே மெல்ல சமாதிக் குழியை நோக்கி நடந்தனர்.

தானே எனை விரும்பித் தானே சமைந்தருளித்
தானே எனை ஆண்ட தம்பிரான் தானே
தனக்கினிய சிற்றம்பல நாடி தன்போல்
எனக் கினிமை உண்டோ இனி

என்று ஒவ்வொரு சீடரும் ஒவ்வொரு பாடலைப் பாடி தத்தமது சமாதிக் குழியினில் அமர்ந்து குருவை நினைந்து நிஷ்டையில் ஆழ்ந்து சிவஞானத்தினுட் கலந்து கரைந்தார்கள். கூட்டம் திகைத்துப் போய் பார்த்த படியிருந்தது. அப்போது திடீரென்று தவத்திற் பக்குவமுறுவதற்காக வடக்கே சென்றிருந்த கண்ணப்பர் அங்கு ஓடோடி வந்தார். தனக்கென்று சமாதி இல்லாததை கண்டு வருந்தினார். இனி யான் செய்வதொன்றுமில்லை. குருவாகிய சிவம் என்ன செய்யவிருக்கிறதோ அதைச் செய்யட்டும். இங்குச் சிவமாகி ஏகவுருக்குள் கலந்து நிற்கும் இவர்கள் அனைவரையும் வலம் வருவது தவிர வேறொன்றும் அறியேன் யான் என்று தமக்குள் தீர்மானமாகி வலம் வரத் தொடங்கினார். குருபக்தி மேலீட்டால் தன்னுடைய இந்த நிலையை எண்ணி கண்ணீர் வடித்தார். கை கூப்பி தொழுது நின்றார். சிவத்தையே கண்ணப்பரின் அகம் கலந்த பக்தி கரைத்தது. சிற்றம்பல நாடிகளின் சமாதி சட்டென்று வெடித்துத் திறந்தது.

ஆதியில் கண்ணப்ப நாயனாரை நோக்கி நில்லு கண்ணப்பா என்று எந்தச் சிவம் சொன்னதோ, அதே சிவம் இப்போது சீகாழி சிற்றம்பல நாடிகளாகி வந்து பெருங்குரலில் ‘அஞ்சற்க’ என்று கரத்தை நீட்டி அருகே அழைத்தது. கண்ணப்பரை தழுவி தம்மடியில் இருத்தி தம்மோடு ஏகமாக இரண்டறக் கலக்கச் செய்தது. மீண்டும் சமாதிக்குள் சென்று அடங்கியது. சுற்றியுள்ளோர் பித்து பிடித்ததுபோல் ‘சிவாய நம... சிவாய நம...’ என்று அரற்றியபடி இருந்தனர். ஒரு ஞானி தம்முடைய சீடருக்காக காத்திருந்து அவரையும் தன் நிலைக்கு ஏற்றி ஏற்றுக் கொண்டதை அரசர் பெரும் வியப்போடு பார்த்தார். தன் குருவின் ஆணையை நிறைவேற்ற எண்ணி காஞ்சிபுரம் சென்று அங்கு தொண்டை மண்டல ஆதீனத்தை நிறுவி மெய்கண்டார் கோயில் அமைத்து அதில் ஸ்ரீசிற்றம்பல நாடிகளின் திருவுருவச் சிலையை அமைத்து வழிபட்டு வந்தார்.

இப்பேற்பட்ட அற்புதங்கள் நிறைந்த, அறுபத்து மூவரோடு கண்ணப்பரையும் சேர்த்துக் கொண்ட சீகாழி சிற்றம்பல நாடிகளின் ஜீவசமாதிக் கோயில் மயிலாடுதுறைக்கு மிக அருகேயே சித்தர்காடு எனும் தலத்தில் அமைந்துள்ளது. கோயில் கிழக்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. கருவறையின் முன் மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் லிங்கத் திருமேனி பூண்டு சீகாழி ஸ்ரீ சிற்றம்பல நாடிகள் பேரருள் பொங்க நிலை கொண்டிருக்கிறார். இனி இப்படியொரு வைபவத்தை இப்பூலோகம் காணுமோ எனுமளவுக்கு லீலையை நிகழ்த்தியிருக்கிறார். கொஞ்சம் மனக் கண்ணால் குருநாதரைச் சுற்றிலும் சிவமாகி இத்தனை ஜீவன் முக்தர்கள் அமர்ந்திருக்கிறார்களே என்று நினைத்தாலே நெஞ்சு விம்மத் தொடங்கும். ஒரு ஞானியின் சந்நதியே ஜீவனை கரை சேர்க்கும் வல்லமை கொண்டது. ஆனால், இங்கோ அறுபத்து மூவரல்லவா என்று எண்ணும்போது திகைப்பு மேலிடுகிறது.

அங்கு பிரவகித்து ஓடும் சிவப் பிரவாகத்தில் நம் மனம் காற்றில் அலையும் தூசாக பறக்கிறது. இதற்கு முன் வேறொன்றும் நில்லாது. நிற்பின் அது நிலைக்காது. நின்றிடின் அது நெருப்பாய் நீறாக்கிவிடும். நானெனும் அகங்காரம் மெல்ல சுருண்டு அடங்கி நிற்கும் மாயம் நிகழ்கிறது. ‘சிவகுருநாதா, என்னிலும் இன்னும் உலகளவு ருசியுண்டு. கண்ணப்பனாய் நின்று இங்கு யாசிக்கிறேன் கருணை கொள் நாடிச் சிற்றம்பலவா’ என்று வேண்டிக் கொண்டு பிராகாரத்தை நோக்கி நகர்கிறோம். இந்தப் பிராகாரத்தில் அறுபத்து மூவரும் சமாதி அடைந்த வைபவத்தை சிறு சிறு சிவலிங்க புடைப்புச் சிற்பங்களாக கோயில் கோஷ்டச் சுவரில் பதித்திருக்கின்றனர். தொட்டு தடவி கண்ணில் ஒற்றிக் கொண்டு நகர்கிறோம். மேலும், கருவறை கோஷ்டத்தைச் சுற்றி விநாயகர், மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரர் போன்றோரை வணங்கி நகர்கிறோம். பிராகாரச் சுற்றில் சிறிய தியான மண்டபம் அமைத்திருக்கிறார்கள்.

அருகேயே அம்பாளுக்கு சிவயோக நாயகி என்கிற திருப்பெயரில் தனிச் சந்நதி உள்ளது. மெல்ல கோயிலை வலம் வந்து நமஸ்கரிக்க, நம்முள்ளும் சிற்றம்பல வாயில் மெல்ல திறக்கத் தொடங்குவதை உணர முடிகிறது. சீர்காழி சிற்றம்பல நாடிகளின் முக்கிய சீடர்களாக சம்பந்த முனிவர், தத்துவப் பிரகாசர், தத்துவநாதர், ஞானப் பிரகாசர், கண்ணப்பர் போன்றோர் விளங்குகின்றனர். சீர்காழி சிற்றம்பல நாடிகள் மிக நுட்பம் பொருந்திய சிவஞான போதத்தை விளக்கிடும் நூலை அருளியிருக்கிறார்கள்.  அதில் துகளறு போதம், செல்காலத்திரங்கல், நிகழ்காலத்திரங்கல், வருகாலத்திரங்கல், திருப்புன்முறுவல் போன்றவை மிக உயர்ந்தவை. இதுதவிர இவரது சீடர்களும், சிற்றம்பல நாடிகள் கலித்துறை, வெண்பா, தாலாட்டு, அநுபூதி விளக்கம் என்றும் இயற்றியிருக்கின்றனர். ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில் சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு வெகு விமரிசையாக குருபூஜை நடத்தப்படுகிறது. இதேபோல மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மயிலாடுதுறை கும்பகோணம் பாதையில் மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும் சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோரத்திலேயே கோயிலுக்கான வளைவிற்குள் நுழைந்து சென்றால் கோயிலை அடையலாம்.

Tags : Siddhartha Siddhars ,Adi Sivakulu ,
× RELATED திருவண்புருஷோத்தமம் புருஷோத்தம பெருமாள்